எந்திரத்தனமான இந்த உலகில் நவதானியம் என்பது வருங்கால சந்ததியினருக்கு ஒரு காட்சி பொருளாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு பொதுமக்களிடம் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. நாம் உண்ணும் உணவு உடலுக்கு பசியை போக்குவதாக மட்டும் இருந்தால் போதாது.
உடல் ஆரோக்கியத்தை காப்பதோடு, ஊட்டச்சத்துக்களை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். அப்பேற்பட்ட உணவு வகைகளை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம்.
அந்த ஊட்டச்சத்துக்களை நமக்கு தருவது நவதானியம் மட்டுமே. தமிழ்நாட்டின் பிரதான உணவு பயிரான நெல்லுக்கு அடுத்த படியாக உணவு தானிய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பவை சிறு தானிய பயிர்களான சோளம், கம்பு, ராகி, வரகு, பனிவரகு மற்றும் குதிரை வாளியாகும்.
சிறு தானியம் பயிரிடும் பரப்பானது 10.58 லட்சம் ஏக்கரில் இருந்து தற்போது 6.31 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. மேலும் அதன் உற்பத்தி 19.67 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 15.57 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. சிறுதானிய பயிர்கள் வறண்ட சீதோஷ்ண நிலையிலும் குறைந்த மண் வளம் உள்ள இடங்களிலும் மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மக்களிடம் சத்து மிகுந்த உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் இவ்வகை சிறு தானிய பயிர்களின் தானியங்களுக்கு சிறந்த விற்பனை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இது இனி வரும் ஆண்டுகளில் சிறு தானிய பயிர்கள் விவசாயிகளால் பெருமளவு பயிரிடப்படும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
சிறு தானிய பயிர்களானது நாம் தற்போது அதிக அளவில் உட்கொள்ளும் அரிசியை விட அதிக அளவு ஊட்டச்சத்து, நார்பொருட்கள், வைட்டமின்கள் கொண்டுள்ளது. சிறுதானிய உணவு பொருட்கள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மிகவும் உகந்தது. இவற்றை தொடர்ச்சியாக உட்கொள்ளும் போது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் முதலியவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
பாரம்பரிய சிறு தானியங்களில் இருந்து உணவு சமைத்து உண்டு வந்த பொழுது அதிக அளவில் உடல் நோயின்றி மக்கள் வாழ்ந்து வந்தார்கள். சிறு தானிய பயன்பாடு குறைந்த பின்பு பல்வேறு வகையான நோய்களுக்குக்கு ஆட்பட்டு உணவுக்கு இணையான அளவு மருந்துகளையும் உண்ணுகின்ற சூழ்நிலைக்கு ஆளாகி விட்டனர்.
குறிப்பாக உலகத்தில் உள்ள 15 கோடி சர்க்கரை நோயாளிகளில் இந்தியாவில் மட்டும் 3 கோடியே 50 லட்சம் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் மக்கள் தொகையான சுமார் 7 கோடியில் 70 லட்சம் பேர் அதாவது 10-ல் ஒரு நபர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையை மாற்ற பாரம்பரியமாக நாம் உண்டு வந்த உணவுகளை வரும் தலை முறையினருக்கு மீண்டும் அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது. பாரம்பரிய பொருட்கள் மற்றும் சிறு தானியங்கள் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கீழே உள்ளவற்றை உணவாக சமைத்து சாப்பிட்டால் அழிந்து வரும் இந்த பயிர்களும்,மனித வளமும் மேன்மையுறும்.
நம் பண்பாட்டின் பாரம்பரிய உணவு பழக்க வழக்கமும் மீட்டெடுக்கப்படும். வரகரிசி, கேரட், பட்டாணி, பீன்ஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு உள்பட பல பொருட்களை சேர்த்து வரகு தம்பிரியாணி, கம்பு, ராகி, தினை, வரகு, சோளம், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸ் மில்லட் அடை சமைத்து சாப்பிடலாம்.
கம்பு மாவு, சோளமாவு, ராகிமாவு உள்பட பல பொருட்களை சேர்த்து மிக்ஸ் மில்லட் சப்பாத்தி சமைக்கலாம். முளை கட்டிய ராகி, தேங்காய், இஞ்சி, பூண்டு, கிராம்பு, பச்சை மிளகாய், பொட்டுக் கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து ராகி மஞ்சூரியன் சமைத்து சாப்பிடலாம். தினை அரிசி, பால், தண்ணீர், கன்டென்ஸ்டு மில்க், வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து தினை பயாசம் தயாரிக்கலாம்.
கம்பு மாவு, பச்சைப்பயிறு மாவு, பொடியாக நறுக்கிய பேரிச்சம் பழம், கருப்பட்டி, பால் சேர்த்து கம்பு லட்டு தயாரித்து சாப்பிடலாம். சாமை அரிசி, பயத்தம் பருப்பு, நெய், கல்கண்டு, திராட்சை, முந்திரி சேர்த்து சாமை கல்கண்டு பாத்தும், வரகரிசி, பொட்டுக்கடலை மாவு, வெண்ணை, சூடான எண்ணை, எள், ஓமம் சேர்த்து வரகு முறுக்கும், கம்பரிசி, கடலை பருப்பு, வெல்லம் சேர்த்து கம்பு இலை அடையும் சமைக்கலாம்.
வரகரிசி, பயித்தம் பருப்பு சேர்த்து வரகு பொங்கலும், சோள அரிசி, தண்ணீர் சேர்த்து சோள சாதம் மற்றும் சோளம், பயத்தம்பருப்பு, மிளகு சேர்த்து சோள உசிலி தயாரிக் கலாம். குதிரைவாலி அரிசி, கேரட், பட்டாணி பீன்ஸ், வெங்காயம், கெட்டியான தேங்காய்பால், முந்திரி சேர்த்து குதிரை வாலி புலாவ் செய்யலாம்.
வரகரிசி, அரைத்த தக்காளி விழுது, வெங்காயம், இஞ்சி, பட்டாணி சேர்த்து வரகு தக்காளி பாத் தயாரிக்கலாம். வரகு கம்பு, சோளம், உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தானிய தோசை சமைக்கலாம். வரகு அவல்,சோள அவல், வேக வைத்த கேரட், பட்டாணி உருளை கிழங்கு சேர்த்து மில்லட் அவல் உப்புமா தயாரிக்கலாம்.
கம்பரிசி, பருப்பு, பாசிப்பயிறு சேர்த்து கம்பு பருப்பு சாதம் செய்யலாம்.தினை அரிசி, தேன், ஏலக் காய், நெய் சேர்த்து தினை மாவு தயாரிக்கலாம். உடைத்த் கம்பு குருணை, கடைந்த தயிர், மோர், நறுக் கிய வெங்காயம் சேர்த்து கம்பங்கூழ் செய்யலாம். சோள மாவு, வேக வைத்து மசித்த துவரம் பருப்பு சேர்த்து சோள அமிர்த பலம் தயாரிக்கலாம்.
வெள்ளை சோளம், மக்காச்சோளம், வெங்காயம், வெள்ளரிக்காய், துருவிய கேரட் சேர்த்து சோள மசாலா பொரி தயாரிக்கலாம். சோள அரிசி, சோள அவல், புளித்த தயிர், சர்க்கரை சிட்டிகை சேர்த்து அவல் தோசை செய்யலாம். கம்பரிசி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கம்பு கொழுக்கட்டை தயாரிக்கலாம்.
சோள அரிசி, துவரம் பருப்பு,மிளகு, சீரகம் சேர்த்து சோள உப்புமா செய்யலாம். சோளமாவு, வெந்நீர், சர்க்கரை, எண்ணை, நெய் சேர்த்து சோள ரொட்டி தயாரிக்கலாம். கம்பு அல்லது கம்பரிசி, முழு உளுந்து, வெந்தயம், ஆமணக்குவிதை சேர்த்து கம்பு இட்லி செய்யலாம். சாமை, தயிர், பால், திராட்சை, முந்திரி, மாதுளம் பழம் ஆகியவை சேர்த்து தயிர் சாதம் செய்யலாம்.
மருத்துவ பயன்கள்:
குதிரைவாலியில் நார்சத்து மிகுதியாக காணப்படுவதால் உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது.இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாக பயன்படுகிறது.
உடலில் கப ஆதிக்கம் அபகரித்து அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள். தினை அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளிகாய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.
கேழ்வரகு :
கேழ்வரகிலுள்ள மாவுச் சத்து மெதுவாக சர்க்கரையாக மாறும் தன்மை உள்ளதால் கேழ்வரகினை உண்பதால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், நீரழிபு நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டினுள் வைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் நார்சத்து அதிகமாக இருப்பதால் ஜீரண சக்தியையும் அதிக மாக்கவும், ரத்தத்தில் உள்ள தேவையில்லாத சர்க்கரை மற்றும் கொழுப்பு பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது. பனிவரகு எலும்புகள்மற்றும் பற்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் உள்ள நார் சத்து உணவு பொருட்களின் செரிமானத்திற்கு உதவுகிறது.
சோளம் :
தானியம் உணவாகவும், உலர்ந்த சோளத் தட்டை கால் நடை தீவனமாகவும் பயன்படுகின்றது. சோளத்தில் உடலுக்கு தேவையான ஆற்றல், புரதம், உயிர் சத்துகள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. அரிசி சார்ந்த உணவை விட சோள உணவு சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. மேலும் சோளம் இதய நோய்கள், ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் வருவதையும் குறைக்கும்.
மக்காச்சோளம் :
தானியங்கள் உணவாகவும், மாட்டு தீவனமாகவும், கோழித்தீவனமாகவும் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. எரிவாயு தயாரிப்பதற்கு மூலப்பொருளாக கொதிகலன்களில் உலர்ப் பான்களில் பயன்படுகின்றன.மக்காச்சோளம் மாவு, ரொட்டி, புட்டு மற்றும் உணவு கலவை செய்வதற்கும் பயன்படுகிறது. மேலும் இனிப்புகள்,சாஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட் மற்றும் கேக்குகள் தயாரிப்பதற்கு பயன்படுகிறது.
கம்பு :
மற்ற தானியங்களை விட கம்பு அதிக புரதசத்து மட்டுமல்லாது அமினோ அமிலங்களையும் அதிகம் பெற்று தரம் வாய்ந்ததாக விளங்குகிறது.போதிய அளவு மாவு சத்தும், அதிக ருசியை கொடுக்க கூடிய கொழுப்பும், வைட்டமின்களும், தாது உப்புகளும் இத்தானியத்தில் நிறைந்துள்ளன. மேலும் ரத்த அபிவிருத்திக்கான இரும்பு சத்து மற்ற தானியங்களை விட இதில் அதிக அளவில் உள்ளது.
சாமை :
சாமை உடல் அசதி மற்றும் தளர்ச்சியை போக்கி சுறுசுறுப்பை தரும். எலும்புகளுக்கும் ஊட்டசத்து அளிக்கும். இதை தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு புலப்படும். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் அடிக்கடி பயணம் செய்வதால் ஏற்படும் முதுகு வலி குறையும்,
வரகு :
வரகில் அடங்கியுள்ள அதிக அளவு லெசித்தின் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. மேலும் `பி' வைட்டமின்கள் குறிப்பிடும் படியாக நியாசின் மற்றும் போலிக், ஆசிட், தாது உப்புகள், கால்சியம், இரும்பு சத்து போன்றவையும் அடங்கி உள்ளன.
வரகு உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்ல உணவாகும். சீரான எடை குறைப்பிற்கும் உடல் பருமனால் ஏற்படும் மன அழுத்தத்திற்கும் நல்ல தீர்வாக பயன்படுகிறது.