04/08/2014

வயித்த இழுத்து பிடிக்குதா...? - இதப்படிங்க..!

 தூரத்தில் நிற்கும் கொன்றை மரத்தின் பூக்கள்  தெருவெங்கும் சிந்திக்கிடந்தன.

யாரையோ வரவேற்பதற்காக தூவப்பட்ட மலர்களைப் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்த அவற்றின் வண்ணம், உள்ளததைக் கிளர்த்தி உற்சாகம் கொள்ளச் செய்தது.

வாசலில் அமர்ந்தபடி அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த வைத்தியரின் மனதுக்குள் பூக்களின் உலகம் விரியத் தொடங்கியது.

பூக்களும், பெண்களும் இல்லாத உலகத்தை கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா?

அல்லி, அலரி, அனிச்சம், அத்திப்பூ, ஆவாரம்பூ, ஆம்பல், ஆத்திப்பூ, இண்டை, கஞ்சம், கனகாம்பரம், காக்கட்டான், குறிஞ்சி, கொன்றை, கொன்னை, கோழிக்கொண்டை, சங்குப்பூ, சாதிப்பூ, சாமந்தி, செம்பருத்தி, செவ்வந்தி, செங்கழுநீர், செங்காந்தள், தாமரை, துத்தி, நந்தியாவட்டை, நீலோற்பலம், பட்டிப்பூ, பாலைப்பூ, பூவரசம்பூ, மகிழம்பூ, மல்லிகை, மந்தாரை, முல்லை, ரோசா, வாகை, வாடாமல்லிகை, ஜாதிமல்லிகை என இந்த மண்ணில்தான் எத்தனைப் பூக்கள்?  எத்தனை வண்ணம்? எத்தனை மணம்?

பூக்களில் அழகும் மணமும் மட்டுமா இருக்கிறது.    அவற்றில் உள்ள எண்ணற்ற மருத்துவ குணங்களை எத்தனைப் பேர் எண்ணிப் பார்க்கிறார்கள்?

கிராமங்கள் கூட இப்போதெல்லாம் காங்கிரீட் வனங்களாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், பூக்களும், தோட்டங்களும் பழங்கால நினைவுச் சின்னங்களைப் போல் அல்லவா மாறி இருக்கின்றன.

வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலை என்பதெல்லாம் ஏதோ பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டுமே காணக்கூடிய காட்சிகளாக அல்லவா போய்விட்டன?

பூக்கள் இல்லாத பூமி உண்மையில் எதுவுமே இல்லாததுதான்.

பூக்களைச் சுற்றி ரீங்கரித்துக்கொண்டிருந்த வைத்தியரின் சிந்தனையை அருகில் வந்து நின்ற ஆரோக்கியசாமியின் குரல் வெளி உலகை நோக்கி இழுத்து  வந்தது.

என்ன வைத்தியரய்யா? என்னமோ கொன்றை மரத்தையே பாக்காதது மாதிரி வச்ச கண்ணு வாங்காம அதையே பாத்துக்கிட்டு இருக்கீங்க..

ஆரோக்கிய சாமியின் கேள்வியை பொருட்படுத்தாமல் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக சிந்திய வைத்தியர், என்னப்பா.... இந்தப்பக்கம்.. அத்தி பூத்தாப்புல...

என்ற அந்த கேள்வியையும் பூவை மையமாக வைத்தே கேட்டார் வைத்தியர்.

அதற்கு உடனே பதில் சொல்லும் நிலையில் ஆரோக்கியசாமி இல்லை.

தனது வயிற்றைப் பிடித்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்த ஆரோக்கியசாமி,

என்னமோ வைத்தியரய்யா இப்பவெல்லாம் அடிக்கடி வயித்தப் புடிச்சி அடிக்கடி இழுத்துக்குது.. எவ்வளவு தண்ணி குடிச்சாலும் வலி நிக்கிறதில்லை.. சாப்பிட்டு முடிச்சு ரொம்ப நேரமாகியும் நெஞ்சு எரிஞ்சுக்கிட்டே இருக்கு.. அதுதான் உங்களைப் பார்த்து ஏதாவது மருந்து கேட்டுட்டுப் போகலாமுன்னு வந்தேன்.

ஆரோக்கியசாமி சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்ட வைத்தியர், மெல்ல பேசத் தொடங்கினார்.

நிறையப் பேரு வயிறை குப்பைத்தொட்டி மாதிரி நினைக்கிறதுனால வர்ற பிரச்சனைதான் இது.  பசிக்குத்தான் உணவு..  வயிற்றின் நான்கில் ஒருபங்கு உணவும், இரண்டு பங்கு தண்ணீரும், 1 பங்கு காற்றும் இருக்கணும்கிறது சித்தர்களோட  அறிவுரை.  யார் கேக்கிறாங்க.. வயிறு புடைக்க சாப்பிடறது  செரிமான கருவிகள சோர்வுகொள்ளச் செய்யுமே தவிர அவற்றை இயங்க வைக்க உதவாது..

மிதமான உணவு.. அளவான ஓய்வு.. இது ரெண்டும்தான் சுகமான வாழ்வு...

உண்டி சுருங்குவது பெண்டிற்கு மட்டுமல்ல.., ஆண்களுக்கும்கூட  நல்லதுதான்..

.. கண்டதையும் கண்ட நேரத்தில உள்ளே தள்ளி வயிற்ற நிரப்பினா அது என்ன செய்யும்.  அரைக்க முடிந்ததைத்தான் அரைக்கும்.  மற்றவையெல்லாம் குப்பைதான்.  செரிக்காது.. நெஞ்சு எரியும்.. வயிறு பொருமும்.. மலச்சிக்கல உண்டாக்கும்.  தூக்கம் வராது..

பசிக்கு உணவு எப்படி அவசியமோ, அதமாதிரி ஆரோக்கியத்திற்கு அளவும் அவசியம், அதுவும் சுகாதாரமான உணவா இருக்கணும்.

இப்போ என்னமோ பட்டணத்துப் பசங்களெல்லாம் ஏதோ பீஸாவாமுல்ல.. அத மல்லுக்கட்டி உள்ள தள்ளுறானுக.. வயிறு என்னத்துக்கு ஆகும்.. எளிதில செரிக்கும் உணவுதான நல்லது...

போகட்டும் இனியாவது இதையெல்லாம்  நினைவில வச்சிக்க.. இப்போ நாஞ் சொல்ற மருந்த கேட்டுக்க..

இஞ்சி         -1 துண்டு

பூண்டு        - 4 பல்

வெற்றிலை        - 2

முருங்கை இலை    - 1 கைப்பிடி

நல்ல மிளகு        - 4

இவைகளை இடிச்சி சாறு எடுத்து தண்ணில கலந்து குடிச்சிக்கிட்டு வா.. இது சாதா வயிற்று வலிக்கு நல்லது... குழந்தைகள் வயித்துவலிக்கும்  இத கொடுக்கலாம்.. கெடுதல் கிடையாது.

வைத்தியர் சொன்ன மருந்தைக் கேட்ட ஆரோக்கியசாமி, உற்சாகத்துடன் அவரிடம் இருந்து விடைபெற்றார்.
+

உடல் எடையை குறைக்க சில சிம்பிள் ட்ரிக்ஸ்...!

இன்றைய நவீன உலகில் உடல் எடையால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவற்றிற்கு நமது உணவுப்பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை தான் காரணம்.

ஆனால் "முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்" என்னும் பழமொழிக்கேற்ப, உடல் எடையையும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களாலேயே குறைக்கலாம். என்ன அது எப்படி முடியும் என்று கேட்கிறீர்களா? ஆம், முதலில் உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்தால், இந்த உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களால் நிச்சயம் குறைத்து, உடலைச் சிக்கென்று வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க முடியும்.
இதை சிலர் நம்பமாட்டீர்கள். நம்பாதவர்களுக்கு கிரீன் டீ, நடைப்பயிற்சி என்று ஏதாவது ஒரு செயலைக் குறிப்பிட்டு செய்தால் குறையும் என்று சொன்னால் மட்டும் தான் நம்புவீர்கள் என்றால், உடல் எடையை குறைத்துவிட்டு, அந்த எடை குறைப்பதற்கான செயலை நிறுத்திவிட்டால், மறுபடியும் உடல் எடை தான் அதிகரிக்கும்.

எனவே அந்த மாதிரியான செயல்களை நம்புவதை விட, எப்போதும் நாம் செய்யும் செயல்களில் ஒரு சிலவற்றை தொடர்ச்சியாக செய்தால், நிச்சயம் உடல் எடை குறைந்துவிடும். சொல்லப்போனால், அந்த செயல்களால் நாம் சிலவற்றை சாப்பிட முடியவில்லையே என வருந்தப்படாமல் இருக்குமாறு இருக்கும். இப்போது அந்த மாதிரியான செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம்.

அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, உடல் எடையை மெதுவாக குறைத்து சந்தோஷமாக வாழுங்கள்.

உடலுக்கேற்ற எடை :
உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்க நினைக்கும் போது, செய்ய வேண்டியது என்னவென்றால் பி.எம்.ஐ, உயரம், எடை போன்றவற்றை அளந்து பார்த்து, நமது உடலுக்கு எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்று உணவுமுறை நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, பின் அதற்கேற்றாற் போல் எடை குறைப்பதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.

உணவுமுறை வித்தியாசங்கள்:

சிலர் உடல் எடையைக் குறைக்கின்றோம் என்று சாதாரணமாக உண்ணும் உணவிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக செயல்படுகின்றனர். அதாவது கம்போர்ட் உணவுகளை திடீரென தவிர்ப்பது, சில நேரங்களில் சாப்பிடாமல் இருப்பது என்று இருக்கின்றனர்.

இவ்வாறு திடீரென எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது. எதுவானாலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் விட வேண்டும். அதற்காக சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. சாப்பிடாமல் இருந்தால், உடல் எடை குறையாது. அதிகரிக்கத்தான் செய்யும். எனவே சாப்பிட வேண்டும். ஆனால் அவற்றில் கவனமும், அளவும் இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி :
உடற்பயிற்சியை காலையில் செய்தால் தான் உடல் எடை குறையும் என்பதில்லை. எந்த நேரம் சரியானதாக உள்ளதோ, அந்த நேரத்தில் தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தாலே, உடல் எடையானது குறையும். எனவே உடற்பயிற்சிக்கு எந்த ஒரு நேரமும் இல்லை. ஆனால் அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை 30-45 நிமிடத்திற்கு மேல் செய்யக்கூடாது.

ஸ்நாக்ஸ்:
உணவு நேரத்தை தவிர மற்ற நேரங்களில் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அப்போது வேறு எந்த ஒரு ஜங்க் உணவுகள், பர்க்கர், வறுத்த உணவுகள் போன்றவற்றை சாப்பிடாமல், அப்போது பிடித்த பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

அதிலும் அந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து எந்த மாதிரியான ரெசிபி செய்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொண்டு, பசிக்கும் நேரம் அவ்வாறு செய்து சாப்பிடலாம். சொல்லப்போனால், அப்போது அவற்றை வைத்து சாண்ட்விச் செய்து சாப்பிடலாம்.

ஆரோக்கியமற்ற உணவு :
எப்போதுமே ஆரோக்கியமான, உடல் எடையை குறைக்கும் உணவுகள் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று இருக்க வேண்டாம். இரண்டு அல்லது ஒரு வாரத்திற்கு ஒரு முறை வேண்டுமெனில் ஐஸ் க்ரீம், பர்க்கர் போன்றவற்றை சாப்பிடலாம். ஏனெனில் அவற்றிலும் ஒருசில சத்துக்கள் இருக்கலாம். எனவே ஒரு முறை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு சாப்பிட்டால், நல்லது தான்.

மனஅழுத்தம் :
மன அழுத்தம் கூட உடல் எடையை அதிகரித்துவிடும். எனவே அவற்றை போக்க தினமும் ஒரு 30 நிமிடம் இசை கேட்பது அல்லது புத்தகம் படிப்பது அல்லது யோகா போன்றவற்றை செய்தால், அந்த மனஅழுத்தத்தை குறைத்துவிடலாம், உடல் எடையையும் அதிகரிக்காமல் செய்யலாம்.

விளையாட்டு :
வாரத்திற்கு ஒரு முறை பிடித்த விளையாட்டுக்களான டென்னிஸ், கால் பந்து, கைப்பந்து, ஜாக்கிங் போன்றவற்றை நண்பர்களுடனோ அல்லது குழந்தைகளுடனோ விளையாடலாம். இதனால் குழந்தைகள் அல்லது நண்பர்களுடன் நேரம் செலவழித்தது போல் இருக்கும், உடல் எடையையும் குறையும் வாய்ப்பும் உள்ளது.

தண்ணீர்:
ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, நாம் செய்யும் அனைத்து செயல்களும் உடலில் தங்கி உடல் எடை குறையும். இல்லையெனில் அந்த அழுக்குகள் நாம் எடை குறைக்க சாப்பிடும் அனைத்து உணவுகளையும், அப்படியே வெளியேற்றிவிடும். ஆகவே உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, தண்ணீர் மிகவும் அவசியமானது.
+

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி...!

புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது.

"பி53' என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் உள்ள எலிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு சாதாரண உணவு அளிக்கப்பட்டது. இன்னொரு பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் சிவப்பு நிற தக்காளி பவுடர் உணவாக அளிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் கருஞ்சிவப்பு தக்காளி பவுடர் அளிக்கப்பட்டது.

சாதாரண மற்றும் சிவப்பு தக்காளி உணவு உட்கொண்டு வந்த எலிகளின் வாழ்நாள் 142 நாட் களில் முடிந்தது. ஆனால், கருஞ்சிவப்பு தக்காளியை உணவாக சாப்பிட்டு வந்த எலிகளின் வாழ்நாள் 182 நாட்களாக நீடித்தது. புற்று நோய் மற்றும் இதய நோய் தாக்கினாலும், கருஞ்சிவப்பு நிற தக் காளிகள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த விதமான காரணிகள், புற்று நோய் அல்லது இதய நோயை தடுக்கின்றன என்பது துல்லியமாக கண்டறியப் படவில்லை. கருஞ்சிவப்பு தக்காளியின் மருத்துவ, ரசாயன குணம் குறித்த அடுத்த கட்ட சோதனைக்கு விஞ் ஞானிகள் தயாராகி வருகின்றனர். மனிதர்களிடம் இதை பரிசோதிக்க நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
+

கொழுப்பை குறைத்து உடம்பை “சிக்” கென்று வைத்திருக்க உதவும் உணவுகள்...!

கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இளம் பெண்களைவிட வயதான பெண்கள் உடற்பயிற்சி செய்வது, ஓடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதால் இவர்களுக்கு எல்.டி.எல். என்ற கெடுதலான கொலஸ்டிரால் இல்லை. மாறாக, நல்ல கொலஸ்டிராலான ஹெச்.டி.எல். கொலாஸ்டிரால் சரியான அளவில் இருக்கிறது. இதனால் இதயநோய் அபாயம் இன்றி நலமாக இருக்கிறார்கள். அடிக்கடி கோபம் ஏற்பட்டால் நல்ல கொலாஸ்டிராலான HDLன் அளவு குறைகிறது.

எனவே, ஆண்களும் பெண்களும் வைட்டமின் E-400 சர்வதேச அலகு சாப்பிடவும். இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர் ஆலோசனைப்படி நிபாஸின் மாத்திரையும் சாப்பிடவும், கோபப்படுவதை தவிர்க்கவும்.

கொழுப்பை குறைக்கும் உணவுகள்:

* கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.

* இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும்.

* வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.

* லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

* சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.

* நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணையை பயன்படுத்த வேண்டும்.

* சாலை மீன் நமது உடம்பின் கொழுப்பை குறைப்பதுடன், நமக்கு தேவையான ஒமேகா 3 யை அதிகளவில் கிடைக்கச் செய்கிறது.

* கருப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

* கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது நமது பழமொழி. கொள்ளு நமது உடம்பின் மிகை கொழுப்பை சமன்படுத்துகிறது.

* சோயா, கோதுமை போன்ற தாணியங்களும் கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது. சோயாபால் தினமும் அருந்தவும்.

இல்லை எனில் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சோயாமாவை, உங்களுக்குத் தயாரிக்கப்படும் உணவில் சேர்த்து பலகாரம் செய்து சாப்பிடுங்கள். தினமும் பத்து டம்ளர் தண்ணீர் அருந்தவும். இத்துடன் தனியாவைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி அருந்தவும். தினமும் மாதுளம்பழம் சாப்பிடுவது மிக மிக நல்லது. இது கொலாஸ்டிரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.
+

நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள் - இதோ உங்களுக்காக...!

காடு, மலைகளில் வாழ்ந்த சித்தர்கள் நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்தார்கள். நோய்கள் அவர்கள் அருகே வர அஞ்சியது. தங்கள் ஆயுள் ரகசியத்தை அவர்கள் சொல்லி இருந்தாலும், நாம் தான் அதன்படி வாழ மறுக்கிறோம். 18 சித்தர்களில் ஒருவரான தேரையார் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு பட்டியலே இடுகிறார்.
மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் இப்படி சொல்கிறார் 

பால் உணவு உட்கொள்ளுங்கள்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளியுங்கள்.

படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்து படுங்கள்.

புளித்த தயிர் உணவை விருப்பி உட்கொள்ளுங்கள்.

பசிக்கும்போது மட்டுமே உணவை உட்கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

இரவில் நன்றாக தூங்குங்கள்.

பெண்ணுடன் மாதம் ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.

வாழைக்காயை உணவுக்கு பயன்படுத்தும்போது பிஞ்சிக் காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் . முற்றிய காய்களை கறி சமைத்து உண்ணக்கூடாது.

உணவு உட்கொண்ட உடனேயே சிறிது தூரம் நடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும்.

6 மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்ள வேண்டும்.

4 மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிடுங்கள்.

1 1/2 மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டு சளி போன்ற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்துகொள்ள வேண்டும். ( இது ஆண்களுக்கு மட்டும் )

4 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

3 நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இட வேண்டும். (பெண்களுக்கு மட்டும்)

விரும்பிய தெய்வங்கள், குருவை வணங்குங்கள்.

இவற்றை எல்லாம் ஒருவர் தனது வாழ்நாளில் பின்பற்றி வந்தால் எமன்
அவரை நெருங்கி வரவே பயப்படுவான் என்கிறார் தேரையார்.

எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு தேரையாரின் அறிவுரை :

பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்த்து விடுங்கள்.

கரும்பு போன்ற இனிப்பவர்களாக இருந்தாலும் வயதில் மூத்த பெண்களுடனும் இனிய வாசம் தரும் தலைமுடியைக் கொண்ட விலைமாதர்களுடன் உடலுறவு கொள்ளாதீர்கள்.

காலை இளம் வெயிலில் அலையாதீகள்.

மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்கி வைத்திருக்காதீர்கள்.

முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்று இருந்தாலும் அதை மறுநாள் உண்ணவேண்டாம்.

உலகமே பரிசாக கிடைக்கிறது என்ற போதும், பசிக்காத போது உணவு உட்கொள்ளாதீர்கள்.

உணவு உட்கொள்ளும்போது தாகம் அதிகம் எடுத்தாலும், இடைஇடையே தண்ணீர் குடிக்கக்கூடாது.

மயக்கும் மனம் வீசும் கந்தம், மலர்கள் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகரக்கூடாது .

மாத விலக்கான பெண்கள், ஆடு, கழுதை போன்றவை வரும் பாதையில் எழும் புழுதி உடல்மேல் படும்படி நெருங்கி நடந்து செல்லாதீர்கள்.

இரவில், விளக்கு வெளிச்சத்தில் நிற்பவர் நிழலிலும், மர நிழலிலும் நிற்பதை தவிர்த்திடுங்கள்.

பசியின் போது உணவு உட்கொண்ட உடனேயும் உடலுறவு வைத்துக்கொள்ளாதீர்கள்.

மாலை நேரத்தில் தூங்குதல், உணவு உட்கொள்ளுதல், அளவுக்கு மீறிய காமச் செயல்களில் ஈடுபடுதல், அழுக்கான ஆடை அணிந்திருத்தல், தலையை வாரி முடி உதிரச்செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.

மற்றவர்கள் கை உதறும்போது அவர்களது நகத்திலிருந்து விழும் தண்ணீரும், குளித்து தலை துவட்டும் போது உதிரும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்காதீர்கள்.

-இப்படி சொல்கிறார் அவர்.

தேரையார் சித்தர் கூறிய அனைத்தையும் ஒரே நாளில் பின்பற்றுவது என்பது இயலாத காரியம். ஏனென்றால், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை அப்படி. அதனால், படிப்படியாக முயற்சிப்போம். நோய், நொடியின்றி நாளும் நலத்தோடு வாழ்வோம்.
+