04/08/2014

Leave a Comment

வயித்த இழுத்து பிடிக்குதா...? - இதப்படிங்க..!

 தூரத்தில் நிற்கும் கொன்றை மரத்தின் பூக்கள்  தெருவெங்கும் சிந்திக்கிடந்தன.

யாரையோ வரவேற்பதற்காக தூவப்பட்ட மலர்களைப் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்த அவற்றின் வண்ணம், உள்ளததைக் கிளர்த்தி உற்சாகம் கொள்ளச் செய்தது.

வாசலில் அமர்ந்தபடி அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த வைத்தியரின் மனதுக்குள் பூக்களின் உலகம் விரியத் தொடங்கியது.

பூக்களும், பெண்களும் இல்லாத உலகத்தை கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா?

அல்லி, அலரி, அனிச்சம், அத்திப்பூ, ஆவாரம்பூ, ஆம்பல், ஆத்திப்பூ, இண்டை, கஞ்சம், கனகாம்பரம், காக்கட்டான், குறிஞ்சி, கொன்றை, கொன்னை, கோழிக்கொண்டை, சங்குப்பூ, சாதிப்பூ, சாமந்தி, செம்பருத்தி, செவ்வந்தி, செங்கழுநீர், செங்காந்தள், தாமரை, துத்தி, நந்தியாவட்டை, நீலோற்பலம், பட்டிப்பூ, பாலைப்பூ, பூவரசம்பூ, மகிழம்பூ, மல்லிகை, மந்தாரை, முல்லை, ரோசா, வாகை, வாடாமல்லிகை, ஜாதிமல்லிகை என இந்த மண்ணில்தான் எத்தனைப் பூக்கள்?  எத்தனை வண்ணம்? எத்தனை மணம்?

பூக்களில் அழகும் மணமும் மட்டுமா இருக்கிறது.    அவற்றில் உள்ள எண்ணற்ற மருத்துவ குணங்களை எத்தனைப் பேர் எண்ணிப் பார்க்கிறார்கள்?

கிராமங்கள் கூட இப்போதெல்லாம் காங்கிரீட் வனங்களாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், பூக்களும், தோட்டங்களும் பழங்கால நினைவுச் சின்னங்களைப் போல் அல்லவா மாறி இருக்கின்றன.

வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலை என்பதெல்லாம் ஏதோ பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டுமே காணக்கூடிய காட்சிகளாக அல்லவா போய்விட்டன?

பூக்கள் இல்லாத பூமி உண்மையில் எதுவுமே இல்லாததுதான்.

பூக்களைச் சுற்றி ரீங்கரித்துக்கொண்டிருந்த வைத்தியரின் சிந்தனையை அருகில் வந்து நின்ற ஆரோக்கியசாமியின் குரல் வெளி உலகை நோக்கி இழுத்து  வந்தது.

என்ன வைத்தியரய்யா? என்னமோ கொன்றை மரத்தையே பாக்காதது மாதிரி வச்ச கண்ணு வாங்காம அதையே பாத்துக்கிட்டு இருக்கீங்க..

ஆரோக்கிய சாமியின் கேள்வியை பொருட்படுத்தாமல் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக சிந்திய வைத்தியர், என்னப்பா.... இந்தப்பக்கம்.. அத்தி பூத்தாப்புல...

என்ற அந்த கேள்வியையும் பூவை மையமாக வைத்தே கேட்டார் வைத்தியர்.

அதற்கு உடனே பதில் சொல்லும் நிலையில் ஆரோக்கியசாமி இல்லை.

தனது வயிற்றைப் பிடித்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்த ஆரோக்கியசாமி,

என்னமோ வைத்தியரய்யா இப்பவெல்லாம் அடிக்கடி வயித்தப் புடிச்சி அடிக்கடி இழுத்துக்குது.. எவ்வளவு தண்ணி குடிச்சாலும் வலி நிக்கிறதில்லை.. சாப்பிட்டு முடிச்சு ரொம்ப நேரமாகியும் நெஞ்சு எரிஞ்சுக்கிட்டே இருக்கு.. அதுதான் உங்களைப் பார்த்து ஏதாவது மருந்து கேட்டுட்டுப் போகலாமுன்னு வந்தேன்.

ஆரோக்கியசாமி சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்ட வைத்தியர், மெல்ல பேசத் தொடங்கினார்.

நிறையப் பேரு வயிறை குப்பைத்தொட்டி மாதிரி நினைக்கிறதுனால வர்ற பிரச்சனைதான் இது.  பசிக்குத்தான் உணவு..  வயிற்றின் நான்கில் ஒருபங்கு உணவும், இரண்டு பங்கு தண்ணீரும், 1 பங்கு காற்றும் இருக்கணும்கிறது சித்தர்களோட  அறிவுரை.  யார் கேக்கிறாங்க.. வயிறு புடைக்க சாப்பிடறது  செரிமான கருவிகள சோர்வுகொள்ளச் செய்யுமே தவிர அவற்றை இயங்க வைக்க உதவாது..

மிதமான உணவு.. அளவான ஓய்வு.. இது ரெண்டும்தான் சுகமான வாழ்வு...

உண்டி சுருங்குவது பெண்டிற்கு மட்டுமல்ல.., ஆண்களுக்கும்கூட  நல்லதுதான்..

.. கண்டதையும் கண்ட நேரத்தில உள்ளே தள்ளி வயிற்ற நிரப்பினா அது என்ன செய்யும்.  அரைக்க முடிந்ததைத்தான் அரைக்கும்.  மற்றவையெல்லாம் குப்பைதான்.  செரிக்காது.. நெஞ்சு எரியும்.. வயிறு பொருமும்.. மலச்சிக்கல உண்டாக்கும்.  தூக்கம் வராது..

பசிக்கு உணவு எப்படி அவசியமோ, அதமாதிரி ஆரோக்கியத்திற்கு அளவும் அவசியம், அதுவும் சுகாதாரமான உணவா இருக்கணும்.

இப்போ என்னமோ பட்டணத்துப் பசங்களெல்லாம் ஏதோ பீஸாவாமுல்ல.. அத மல்லுக்கட்டி உள்ள தள்ளுறானுக.. வயிறு என்னத்துக்கு ஆகும்.. எளிதில செரிக்கும் உணவுதான நல்லது...

போகட்டும் இனியாவது இதையெல்லாம்  நினைவில வச்சிக்க.. இப்போ நாஞ் சொல்ற மருந்த கேட்டுக்க..

இஞ்சி         -1 துண்டு

பூண்டு        - 4 பல்

வெற்றிலை        - 2

முருங்கை இலை    - 1 கைப்பிடி

நல்ல மிளகு        - 4

இவைகளை இடிச்சி சாறு எடுத்து தண்ணில கலந்து குடிச்சிக்கிட்டு வா.. இது சாதா வயிற்று வலிக்கு நல்லது... குழந்தைகள் வயித்துவலிக்கும்  இத கொடுக்கலாம்.. கெடுதல் கிடையாது.

வைத்தியர் சொன்ன மருந்தைக் கேட்ட ஆரோக்கியசாமி, உற்சாகத்துடன் அவரிடம் இருந்து விடைபெற்றார்.

0 comments:

Post a Comment