கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாகவைப்பது என்று பொருள். மனிதனுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுப்பவை கற்ப மூலிகைகள். அவற்றில் ஒன்றுதான் கண்டங்கத்தரி. கண்டம் என்பது தொண்டைப் பகுதியைக் குறிக்கும். தொண்டையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதால் இதற்கு கண்டங்கத்திரி என்று பெயர்.
‘சொலானம் சுரட்டென்ஸ்’ (Solanum surattense) என்பது கண்டங்கத்தரியின் தாவரவியல் பெயர். இது சிறுபஞ்சமூல வகைகளில் (கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறு நெருஞ்சில், சிறுமல்லிகை, பெருமல்லிகை) ஒன்றாகக் கருதப்படுகிறது. செடி வகையைச் சேர்ந்த இது, எல்லா இடங்களிலும் வளரக் கூடியது. கண்டங்கத்தரியின் நோய் தீர்க்கும் குணம்பற்றியும் அதை எப்படிச் சேர்த்துக்கொள்வது என்பதுபற்றியும் விரிவாக விளக்குகிறார் சுப்ரமணியபுரம் அரசு சித்த மருத்துவர் அருண்குமார்.
”சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்திப் பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். இது கோழை அகற்றியாகவும் சிறுநீர்ப் பெருக்கியாகவும் குடல் வாயு அகற்றியாகவும் செயல்படும்.தலையில் நீர் கோத்தல், சூலை நீர் எனப்படும் கபநீர், பித்த நீர் இவற்றைச் சீராக்கும். மேலும், தொண்டையில் ஏற்படும் நீர்க்கட்டு, அடைப்பு, மூக்கில் நீர் வடிதல், சளி, மூச்சுத்திணறல், இருமல், ஈழை, இழுப்பு போன்ற பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்க வல்லது கண்டங்கத்தரி.
பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டவை. கண்டங்கத்தரி, இண்டு, இசங்கு, தூதுவளை, ஆடாதொடை ஆகிய மூலிகைச் செடிகளின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் காயவைத்துப் பொடியாக்கவும். இந்தப் பொடியைத் தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டுவந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளும் தீரும்.
கண்டங்கத்தரி கஷாயம்:- இண்டு, இசங்கு, கண்டங்கத்தரி, ஆடாதொடை, தூதுவளை, துளசி இலை, வால்மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் தலா ஐந்து கிராம் அளவு எடுத்து இடித்துப் பொடிக்கவும். இந்தப் பொடியில் சரிபாதியை எடுத்து இரண்டு கோப்பை நீரில் கொதிக்கவைக்கவும். நீர் கொதித்து ஒரு கோப்பையாகச் சுண்டிப்போனதும் வடிகட்டி அருந்த வேண்டும். இதேபோல் மற்றொரு பங்கை மாலையில் காய்ச்சி வடிகட்டி அருந்த வேண்டும். தீராத ஆஸ்துமா, வலிப்பு நோய் போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் அளிக்கும்.
கண்டங்கத்தரி விதையைக் காயவைத்து எரிக்கும்போது வரும் புகையை வாய்க்குள் அடக்கினால் பல் வலி நீங்கும். வாயில் உள்ள கிருமிகள் அழியும். கசப்புத்தன்மை கொண்ட கண்டங்கத்தரிக் காயைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இருமல், சளி குணமாவதோடு, வயிற்றில் உள்ள கிருமிகளும் நீங்கி நன்கு பசி எடுக்கும். இக்காய்களை வற்றல் செய்தும் சாப்பிடலாம்.
கண்டங்கத்தரிப் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இளைப்பு (உடல் இளைத்தல்) நீங்கி உடல் வலிமை அதிகரிக்கும். மேலும், பல் அரணை மற்றும் தோல் நோய்களையும் குணப்படுத்தும். பழத்தைக் காயவைத்துப் பொடித்து தேனில் கலந்து காலை, மாலை என இருவேளை கொடுத்துவரக் குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமல் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
கண்டங்கத்தரிப் பழத்தைக் கொதிக்கும் நீரில் குழையவைத்து வடிகட்டிய பின் நான்கு பங்குக்கு ஒரு பங்கு சுரை விதை எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி ஆறவிட்டு காதுக்குள் விட காது வலி நீங்கும்.
கண்டங்கத்தரி இலைச் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்த்துவந்தால், தலைவலி, கீல் வாதம், அக்குள் நாற்றம் ஆகியவை சரியாகும். கண்டங்கத்தரி இலைச் சாறுடன் ஆளி விதை மற்றும் நெய் சேர்த்துக் காய்ச்சிக் கால் வெடிப்புகளில் பூசிவர வெடிப்புகள் விரைவில் குணமாகும்.
வேர் 30 கிராம், சுக்கு ஐந்து கிராம், சீரகம் இரண்டு சிட்டிகை, கொத்தமல்லி இலை ஒரு பிடி ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சவும். 100 மி.லி. அளவு வீதம் ஒரு நாளைக்கு நான்கு முதல் ஆறு முறை குடித்துவர சீதளக்காய்ச்சல், சளிக்காய்ச்சல் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
கண்டங்கத்தரி நீர்:- கண்டங்கத்தரி வேர், ஆடாதொடை வேர் தலா 40 கிராம், உடைத்தெடுத்த அரிசித்திப்பிலி 5 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராக வரும்வரை சுண்டக் காய்ச்சவும். 100 மி.லி.வீதம் தினம் நான்கு வேளை குடிக்க இரைப்பு இருமல் (ஆஸ்துமா), எலும்புருக்கி (க்ஷயம்) ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் ஆகியவை தீரும்.”
0 comments:
Post a Comment