போதை மருந்து மற்றும் மது ஆகியவற்றுக்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்பது, சற்று கடினம். இந்த பழக்கத்துக்கு ஆளானவர்களை, அதிலிருந்து மீட்க, உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப் படுகின்றன.
இவற்றில், சைபீரியா நாட்டில் மேற்கொள்ளப் படும் சிகிச்சை முறை, மிக வித்தியாசமாக உள்ளது. மது மற்றும் போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு, உளவியல் ரீதியிலான சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன.
இதற்காக, சைபீரியாவின் பல பகுதிகளில், சிறப்பு மருத்துவ மையங்கள் செயல்படுகின்றன. போதை மருந்துக்கு அடிமையாகி, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் பலரும், தங்களின் கடைசிகட்ட முயற்சியாக, இங்கு வருகின்றனர்.
இங்கு, இவர்களுக்கு மருந்து, மாத்திரை, ஊசிகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை. குப்புற படுக்க வைத்து, பின்புறத்தில், குச்சியால், சரமாரியாக அடிக்கின்றனர். அதுவும், ஒரு அடி, இரண்டு அடி இல்லை; 50 முதல், 70 அடிகள் வரை, கொடுக்கப்படுகின்றன.
இந்த, 70 அடியுடன், சிகிச்சை முடிந்து விடாது. மது மற்றும் போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையானவர்கள், எந்த அளவுக்கு தீவிரமாக பாதிக்கப் பட்டுள்ளனரோ, அந்த அளவுக்கு, சிகிச்சையின் தீவிரமும் இருக்கும்.
அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால், ஐந்திலிருந்து ஆறு தடவை வரை, குச்சியடி சிகிச்சை தொடரும். ஒரு சிகிச்சைக்கு, 70 அடி வீதம், ஐந்து சிகிச்சைக்கு, 450 அடிகள் வரை கிடைக்கும். சைபீரியாவைச் சேர்ந்த, மனித உரிமை ஆர்வலர்களும், மற்ற மருத்துவர்களும், இந்த சிகிச்சை முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், தங்களின் சிகிச்சையை நியாயப் படுத்துகின்றனர், இதை மேற்கொள்ளும் உளவியல் நிபுணர்கள். குச்சியடி சிகிச்சை முறையை நடத்தி வரும், சுக்ரோவா என்ற உளவியல் நிபுணர் கூறியதாவது:
ஒவ்வொருவருக்குமே, தங்களின் உடலுக்கு புத்துணர்வு அளிக்கும், "எண்டோர்பின்' என்ற ஹார்மோன் உள்ளது. போதை மருந்து, மது, செக்ஸ் போன்ற பழக்கங் களுக்கு அடிமையாகிப் போனவர்களுக்கு, இந்த ஹார்மோன்கள் சுரப்பது, குறைந்து, படிப்படியாக நின்று விடும்.
இதனால், "போதை மருந்தை பயன்படுத்துவது, மது குடிப்பது போன்றவற்றால் மட்டும் தான், நமக்கு புத்துணர்ச்சி அல்லது இன்பம் கிடைக்கும்...' என, இந்த பழக்கங்களுக்கு அடிமையாகிப் போனவர்கள் நினைக்கத் துவங்கி விடுகின்றனர்.
இப்படிப்பட்டவர்களுக்கு, அந்த ஹார்மோனை மீண்டும் சுரக்க வைக்கும் முயற்சியாகத் தான், எங்களின் குச்சியடி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. போதை மருந்துக்கு அடிமையானவர் கள், முதலில் எங்களிடம் வந்ததும், அவர்களுக்கு பல்வேறு ஆலோசனை கள், உடற் பயிற்சிகள் போன்ற சிகிச்சையை மேற்கொள்வோம்.
அதில் அவர்களுக்கு பயன் கிடைக்கவில்லை என்றால், இறுதியாகத் தான், குச்சியை கையில் எடுப்போம். இதற்காகவே, பிரத்யேகமாக குச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை, எளிதில் வளையும் தன்மையுடையவை.
இந்த குச்சிகளைப் பயன்படுத்தி அடித்தால், வலி இருக்குமே தவிர, ரத்தக் காயம் ஏற்படாது. பாதிக்கப்பட்டவர்களை, குப்புற படுக்க வைப்போம். பின்புறத்தில் மட்டுமே அடிப்போம். ஒவ்வொரு அடியும், அடி வாங்குவோரின், "எண்டோர்பின்' ஹார்மோனை தூண்டி, அவற்றை மீண்டும், உடலுக்குள் பாய்ச்சுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும்.
சிகிச்சை முடிந்ததும், ஏற்கனவே இழந்த ஹார்மோன் முழுவதும் செயல்பாட்டுக்கு வந்து, புத்துணர்வை ஏற்படுத்தும். சோம்பல், ஏக்கம், வெறுப்பு ஆகியவை மறைந்து, மனதுக்குள் உற்சாகம் ஏற்படும். இதன்மூலம், போதை மருந்து மற்றும் மதுவை அவர்கள் மீண்டும் நாட மாட்டார்கள். இந்த சிகிச்சை முறை, பலருக்கும் பயன் அளித்துள்ளது என்கிறார் குச்சியடி நிபுணர் சுக்ரோவா.
0 comments:
Post a Comment