இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும்.
இந்திய உணவில் இரண்டு வகை உண்டு.
தென்னிந்திய உணவு வகை,
வட இந்திய உணவு வகை.
தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது.
குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது.
இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேயைõன அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று. இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம்நன்கு வெண்மையாகவும் காணப்படும்.
இந்தியாவில் அனைத்து பகுதியிலும் பயிராகும் ஒருவகை செடியாகும். பணப்பயிர்களில் இதுவும் ஒன்று.
இதற்கு உளுந்து, மாடம், மாஷம் என்ற பெயர்களும் உண்டு. இதன் விதை (பருப்பு) வேர் மருத்துவப் பயன் கொண்டது.
செய்ய உருந்திற்குச் சிலேத்மவனி லற்பிறக்கும்
வெய்யபித்தம் போமந்தம் வீறுங்காண் -மெய்யதனில்
என்புருக்கி தீரும் இடுப்புக் கடுபலமாம்
முன்பு விருத்தியுண்டாய் முன்
(அகத்தியர் குணபாடம்)
நோயின் பாதிப்பு நீங்க
கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.
இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.
உடல் சூடு தணிய
இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.
உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
தாது விருத்தியாக
உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
உளுந்து வடை
வெறுமுளுந்திற் செய்வடைக்கு மேன்மேலும் -வாதம்
உறும்பித்தம் சற்றே யொடுங்கும்-நறுந்தீ
பனம்போம் புசிப்பியு பருகநன்றாம் வாலி
யனம்போ னடையாயறி
(அகத்தியர் குணபாடம்)
உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.
எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு
தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.
நடுக்கு வாத தைலம்
உறுதியுள்ள உளுந்ததுவும் பலம் ஈரைந்து
ஓதிய சேவகன் மூலம் பலமிரண்டு
சுறுதியுடன் முக்குறுணி சலத்திலிட்டு
சுண்டவே கஷாயமது படிமூன்றுக்குள்
பொறுதயுடன் நல்லெண்ணெய் படியோரொன்று
புகட்டி அதில் ஆவின்பால் படி இரண்டு
அறுதியாய் கலந்தணில் மருந்தைக் கேளு
ஆனசிறுபுள்ளடி சாரணையின் வேரே
வேரான அசுவகெந்தி சிற்றரத்தை
விளைந்த அகில்முக்கடுகு இந்துப்பு தானும்
சீரான வசம்பு சதகுப்பை யோடு
செவ்விய மோர் வகை கழஞ்சு திறமாயாட்டி
நேரான எண்ணெயதில் கரைத்துக் காய்ச்சி
பிசகாமல் மெழுகு பதம்தனில் வடித்து
மேரான உடல்பூச நடுக்கு வாதம்
விட்டகலும் இன்னமொரு விவரம் கேளே...
உளுந்து பத்து பலம் (350 கிராம்)
சிற்றாமுட்டி வேர் இரண்டு பலம் (70 கிராம்)
தண்ணீர் மூன்று குறுணி (16 லிட்டர்)
சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்காக அதாவது 4 லிட்டராக வரும் வரை காய்ச்சி அதனுடன் ஒருபடி நல்லெண்ணெய் (1.3 லிட்டர்) இரண்டுபடி (2.6 லிட்டர்) பசுவின் பாலில் கலக்கவும். அதனுடன் சிறுபுன்னை, சாரணையின் வேரும் மேலும்
அதனுடன் அசுவகெந்தி, சிற்றரத்தை, அகில் திரிகடுகு, இந்துப்பு, வசம்பு, சதகுப்பை, செவ்வியம் இவற்றை வகைக்கு ஒரு கழஞ்சு (5 கிராம்) எடுத்து அரைத்து, எண்ணெயில் கரைத்து அடுப்பேற்றிக் காய்ச்சி, மெழுகு பதம் வரும்போது வடித்து உடம்பில் பூச நடுக்கு வாதம் குணமாகும்.
(சுக்கிர சிந்தாமணி நூலிலிருந்து)
இடுப்பு வலுப்பெற
சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
குழந்தைகளுக்கு
சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.
பெண்கள்
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.
உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.
உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.
0 comments:
Post a Comment