23/03/2014

Leave a Comment

முகவாத நோய் பற்றிய அதிர்ச்சித்தரும் தகவல்கள்..!

முகவாத நோய் பற்றிய தகவல்கள்:-


முகவாத நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நரம்பு Facial Nerve எனப்படும். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகத்தசைகளை இயக்கக் கூடிய பணியைச் செய்யும் இந்த ஏழாவது கபால நரம்பு (Seventh Cranial Nerve or Facial Nerve) மூளையின் தண்டுப்பகுதியிலிருந்து புறப்பட்டு காதின் உட்புறம் இருக்கும் சிறு குழாயின் (Stylomastoid Canal) மிகவும் குறுகிய பகுதி வழியாக கபாலத்தை விட்டு வெளியேறி, முகத்திலுள்ள தசைகளுக்கு வந்து சேருகிறது.

முகத்திற்கு வந்ததும் ஐந்து கிளைகளாகப் பிரிந்து முகத்தசைகள், கண்ணீர் சுரப்பிகள், உமிழ் நீர் சுரப்பிகள், நாக்கு, உள்காது ஆகியவற்றில் உள்ள தசைகளை இயக்குகிறது. இந்த நரம்பு பாதிக்கப்படும் போது இந்த தசைகளின் இயக்கங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.

முகவாத நோய்க்கான காரணங்கள் இரண்டு.

1. சில்லென்ற குளிர்காற்று. குளிர்காலங்களில் இரவுப் பயணத்தின் போது, கார், ரயில், இரண்டு சக்கர வாகனங்களில் காதுகளை மூடாமல் செல்வதாலும் அல்லது இரவு நேரங்களில் திறந்த வெளியில் படுத்து உறங்குவதாலும் இந்த நோய் பாதிப்பு ஏற்படலாம்.

2. Herpes Zoster என்ற வைரஸ் நோய்த் தாக்கம். சிறுவயதில் சிற்றம்மை பாதிக்கப்பட்டிருந்தால், அம்மை குறைந்த பின்னும், வைரஸ் கபாலத்தின் உள்ளே, Gasserian ganglion என்னும் பகுதியில் தேங்கியிருக்கும். வேறு சந்தர்ப்பத்தில் உடல் நலக் குறைவின்போது, இந்த வைரஸ் வீறுகொண்டு தாக்கும். அப்பொழுதும் முகவாத நோய் ஏற்படலாம்.

திறந்த வெளியில் தூங்கி காலையில் எழுந்திருக்கும் போது, குளிரினால் காதுக்குள் உள்ள நரம்புகள் பாதிப்படைவதாலும் முகத்தில் ஏதேனும் ஒரு பக்க தசைகள் செயலிழந்து விடும். இதனால் வருவது தான் முகவாத நோய். இந்த நோய்க்கு "பெல்ஸ் பால்சி" (Bell's Palsy) என்று பெயர். இந்த நோய் இருபாலருக்கும், எந்த வயதிலும் வரலாம்.

முகவாத நோயின் அறிகுறிகள்:

இந்த பாதிப்பு முகத்தின் ஒரு பக்கத்தில்தான் வரும்.

முதலில் காதின் முன்புறம் அல்லது பின்புறம் வலி தோன்றும்.

நோய் பாதிப்புள்ள பக்கத்தின் மறுபக்கமாக வாய் கோணிக் கொள்ளும்.

பாதிக்கப்பட்ட பக்கம் மதமதப்பாக இருப்பதாக நோயாளிகள் உணர்ந்தாலும், அப்பகுதியில் தொடு உணர்ச்சி குறைவதில்லை.

உணவு சாப்பிட்டால் அல்லது பானங்கள் அருந்தினால் பாதிக்கப்பட்ட பக்கத்தில் ஒழுகும்.

உணவை மெல்லும் போது அது பாதிக்கப்பட்ட பகுதியில் பற்களுக்கும், கன்னத்திற்கும் இடையில் தங்கிக் கொள்ளும்.

நாக்கில் சுவை தெரியாது.

சிலருக்கு தலைவலி, தலைச்சுற்றல் ஏற்படும்.

Herpes Zoster வைரஸ் காரணமாக முகவாத நோய் வருபவர்களுக்கு வலியுடன் கூடிய சிறு சிறு கொப்பளங்கள் காதின் உட்பகுதியிலும், வெளியிலும் ஏற்படலாம்.

கண்ணிமைகள் தளர்ந்து, கண் பாதி திறந்த நிலையில் இருக்கும். உறங்கும் போது கூட கண்ணை முழுவதுமாக மூட முடியாது. இதனால் கண்ணின் கருவிழி எனப்படும் Cornea ஈரத்தன்மை உலர்ந்து கண் எரிச்சல் ஏற்படும். இது Exposure Keratitis எனப்படும்.

முகவாத நோய்க்கு மருத்துவம்:

ஆரம்ப நிலையில் காதின் முன்புறம் அல்லது பின்புறம் தோன்றும் வலிக்கு நிவாரணமாக ஆஸ்பிரின் 500 மி.கி மாத்திரை 3 வேளை 2 நாட்களுக்கு சாப்பிடலாம்.

வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இது வருவதால் வைரஸ் கிருமிகளை ஒழிக்கும் Acyclovir மாத்திரைகள் இதற்குத் தரப்படும்.

இவற்றுடன் ஸ்டீராய்டு மாத்திரைகளும் ஒரு சில நாட்கள் மட்டுமே தரலாம்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது Physiotherapy.

மருந்து மற்றும் Physiotherapy யினால் 3- 4 வாரங்களில் குணமாக ஆரம்பித்து, 3- 6 மாதங்களில் முழுதும் குணமாகலாம்.

பாதிக்கப்பட்ட பக்கத்தில் உள்ள கண்ணின் இமைகளை முழுவதும் மூட முடியாமல் போகும் நேரங்களில், கண்ணின் கருவிழியில் புண் (Exposure Keratitis) ஏற்படலாம். கண்ணைப் பாதுகாக்க தூங்கும்போது சிறு plaster வைத்து மேல் இமையை கன்னத்தின் பக்கத்தில் ஒட்டிக் கொள்ளலாம்.

Ciprofloxin antibiotic Eye Ointment 2 வேளை கண்ணுக்கு போடலாம்.

இரண்டு காதுகளையும் குளிரிலிருந்து பாதுகாக்க கம்பளித் துண்டு அல்லது குல்லா அணியலாம்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாமதமின்றி பொதுநல மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மற்றும் கண் மருத்துவரை கலந்து ஆலோசனை பெறுவது அவசியம்.

0 comments:

Post a Comment